முக்கியச் செய்திகள்
Home / இந்தியா / கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு தீர்ப்பு
201608090115095939_Kannada-Telugu-Malayalam-Odia-languages-High-Court-judge_SECVPF

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி; ஐகோர்ட்டு தீர்ப்பு

சென்னை,

கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

செம்மொழி அந்தஸ்து

சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் ஆர்.காந்தி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிக்கு கடந்த 2005–ம் ஆண்டும், மலையாளத்துக்கு 2013–ம் ஆண்டும், ஒடியா மொழிக்கு 2014–ம் ஆண்டும் மத்திய அரசு செம்மொழி அந்தஸ்தை வழங்கியுள்ளது. மொழி வளமை, இலக்கண, இலக்கிய பாரம்பரியம் உள்ளிட்ட எந்த ஒரு தகுதியும் இல்லாத இந்த மொழிகளுக்கு, மத்திய அரசு தன் விருப்பப்படி செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. எனவே, இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

பதவி உயர்வு அல்ல

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த ஆவணங்களை பார்க்கும்போது, கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவது குறித்து நிபுணர்கள் குழு ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில், செம்மொழி அந்தஸ்தை பெற இந்த மொழிகளுக்கு தகுதி இருப்பதை உறுதி செய்த பின்னர், அந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. எனவே, நிபுணர்கள் குழுவின் ஒப்புதல் அறிக்கையை இந்த ஐகோர்ட்டு பரிசீலிக்க முடியாது.

ஒரு மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டால், அந்த மொழி தொடர்பான படிப்புகளுக்கு மையங்கள் உருவாக்கவும், அந்த மொழியை வளர்க்கவும், பாதுகாக்கவும் நிதி ஒதுக்கப்படும். உண்மையில், செம்மொழி அந்தஸ்து என்பது ஒரு மொழிக்கு கொடுக்கப்படும் பதவி உயர்வு அல்ல. அந்த மொழியை பாதுகாக்கவும், வளர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்குவதற்காகத்தான் இந்த அந்தஸ்து வழங்கப்படுகிறது.

தமிழின் முக்கியத்துவம்

மேலும், இந்த 4 மொழிகளுக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் வழங்கும் நிபுணர்கள் குழுவில், தமிழ் அறிஞர்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒருவர் இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கக்கூடாது என்று எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். ஆனால், பெரும்பான்மையான நிபுணர்கள் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்ததால், இவரது எதிர்ப்பு வீணாகி போய் விட்டது.

தமிழுக்கு இணையாக இந்த மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதால், அது தமிழுக்கு உள்ள முக்கியத்துவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று மனுதாரர் கூறுகிறார். இவரது கருத்தை எங்களால் ஏற்க முடியவில்லை. ஒரு மொழியின் முக்கியத்துவம் என்பது பிற மொழிகளின் வளர்ச்சியிலோ அல்லது வீழ்ச்சியிலோ இல்லை. ஒரு மொழியின் முக்கியத்தும் என்பது, அந்த மொழியின் அறிஞர்கள் கலை, இலக்கியத்துக்கு செய்யும் பங்களிப்பில்தான் உள்ளது. அதே நேரம் தமிழ் மொழி என்பது இலக்கண, இலக்கிய, பாரம்பரிய வளம் கொண்ட செழுமையான மொழி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தலையிட முடியாது

மேலும், மனுதாரர் செம்மொழி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால், ஒரு மொழி 1500 ஆண்டுகள் முதல் 2000 ஆண்டுகளுக்கு முன்பே பழமையான மொழியாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தகுதிகளை கூறுகிறார். இவற்றை எங்களால் ஏற்க முடியாது.

ஒரு மொழி செம்மொழி அந்தஸ்தை பெற தகுதியானது என்று நிபுணர்கள் முடிவு செய்து ஒப்புதல் கொடுத்து விட்டனர். இதில் இந்த ஐகோர்ட்டு தலையிடுவதற்கு எந்த ஒரு காரணமும் இருப்பதாக எங்களுக்கு தெரியவில்லை.

ஒருவேளை மனுதாரருக்கு இன்னமும் ஆட்சேபனை ஏதாவது இருந்தால், அவர் மத்திய அரசிடம் முறையிடலாம். இந்த வழக்கை முடித்து வைக்கிறோம்.  இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Check Also

201608090528132921_With-Karunanidhi-AP-Education-Minister-Meets-Are-invited_SECVPF

கருணாநிதியுடன், ஆந்திர கல்வி மந்திரி சந்திப்பு; கும்பமேளா விழாவில் கலந்து கொள்ள அழைப்பு

சென்னை, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் ஆந்திர மாநில கல்வி மந்திரி கண்ட ஸ்ரீனிவாசலு …