முக்கியச் செய்திகள்
Home / Banner / பாகிஸ்தானில் பயங்கரம் ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 55 பேர் பலி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம்
201608090534427177_Terror-in-Pakistan-suicide-attack-aspattirikkul-55-people_SECVPF

பாகிஸ்தானில் பயங்கரம் ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்; 55 பேர் பலி 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம்

குவெட்டா,

பாகிஸ்தானின் குவெட்டா நகர ஆஸ்பத்திரிக்குள் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி தாக்குதல் நடத்தினான். இதில் வக்கீல்கள் உள்பட 55 பேர் பலியாயினர்.

தற்கொலைப்படை தாக்குதல்

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாண தலைநகரான ‘குவெட்டா’வில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்குள் நேற்று காலை 11 மணி அளவில் தற்கொலைப்படையைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் புகுந்தான். அவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டவாறே உடலில் கட்டிக் கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான்.

அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. அப்போது அந்த பகுதியில் கூடியிருந்த 100–க்கும் மேற்பட்ட வக்கீல்களும், பொதுமக்களும் இதில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் நாலாபுறமும் தூக்கி வீசப்பட்டனர்.

55 பேர் பலி

இதில் சம்பவ இடத்திலேயே ஏராளமான வக்கீல்கள் உள்பட 55 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 100–க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களின் உடல்களும், படுகாயம் அடைந்தவர்களும் ஆங்காங்கே கிடந்ததால் ஆஸ்பத்திரி வளாகமே ரத்தக் காடாக காட்சியளித்தது.

இதையடுத்து, உடனடியாக ஆஸ்பத்திரியைச் சுற்றிலும் ராணுவ வீரர்களும், போலீசாரும் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். பலத்த காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு ஆம்புலன்கள் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் 20 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

வக்கீல் சுட்டுக்கொலை

குண்டுவெடிப்பு சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்புதான், பலுசிஸ்தான் மாகாண வக்கீல்கள் சங்கத் தலைவர் பிலால் கசி என்பவர் கோர்ட்டுக்கு சென்றபோது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதனால் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக குவெட்டா நகர அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. இதையொட்டித்தான் அங்கு 100–க்கும் மேற்பட்ட வக்கீல்கள், செய்தியாளர்கள் என ஏராளமானோர் குவிந்தனர்.

அவர்கள் அனைவருமே தற்கொலைப்படை தாக்குதலில் சிக்கிக் கொண்டனர். பாகிஸ்தான் செய்தி சேனல் ஒன்றின் செய்தியாளரும் இந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.

போலீசார் சந்தேகம்

குவெட்டா அரசு ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. அதே நேரம், பிலால் கசி சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் ஆஸ்பத்திரியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பலுசிஸ்தான் மாகாண முதல்–மந்திரி சனாவுல்லா ஜெஹ்ரி கூறுகையில், ஆஸ்பத்திரியில் நடந்த சம்பவம் பயங்கரவாத தாக்குதல்போல்தான் தெரிகிறது என்றார்.

நவாஸ் ஷெரீப் கண்டனம்

பிரதமர் நவாஸ் ஷெரீப் இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்து உள்ளார்.

அவர் விடுத்த அறிக்கையில், “பலுசிஸ்தான் மாகாணத்தின் அமைதிக்காக பாதுகாப்பு படையினர், போலீசார், மக்கள் என ஏராளமானோர் தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்து இருக்கின்றனர். எனவே மாகாணத்தில் அமைதியை யார் சீர்குலைக்க முயன்றாலும் அவர்களைச் சும்மா விடமாட்டோம்’’ என்று எச்சரித்தார்.

குவெட்டா நகரில் அமைதியை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கும்படியும், எந்த நேரமும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் போலீசாரை கேட்டுக் கொண்டார்.

Check Also

201607291558318185_IS-executes-24-civilians-after-seizing-Syria-village-monitor_SECVPF

சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர்

பெய்ரூ, சிரியாவில் கிராமத்தை கைப்பற்றிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் 24 பேரை கொன்றனர் என்று கண்காணிப்பு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. …